Principal’s Message
மனிதனாக இருப்பதற்கான வேதாகம உணர்வை உருவாக்குதல்
ㅤ
மனிதனாக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன? இது, எமது நாட்களில் காணப்படுகிற மிக அழுத்தமான கேள்வியாகும்.
"உளவியல் சார்ந்த பிரிவுகளும் உள்ளான அவதானமும் ஒரு மனிதன்; நவீனமயமானவனாக இருப்பதற்குரிய அடையாளங்கள்" என்ற சிந்தனையினால் உலகம் தீவிரமாக மறுவடிவமைக்கப்படுகிறது. இது உதாரணமாக, "பாடசாலைகள் மற்றும் திருச்சபைகள் போன்ற நிறுவனங்கள் ஒருவர் செயற்படுவதற்கு செல்லும் இடங்களேயன்றி வடிவமைக்கப்படுவதற்காக அல்ல" என்பன போன்ற வாதங்களை முன்வைக்கக்கூடிய "வெளிப்படையான தனிமனிதவாதம்" என்ற புதுமையான நிகழ்வினை கொண்டு வந்துள்ளது. முன்பதாக, பகிரப்பட்ட சமூகத்திற்குள் தனிமனிதர்கள் பங்கேற்ற சமூகமே கலாச்சாரம் என்பதான புரிதல் இன்று முழுமையாக மாறி விட்டது. இன்று நவீன வழியில் மனினாக வாழ்வது என்பதில் தனிப்பட்ட நம்பிக்கைகளும் விருப்பத்தேர்வுகளும் மையமாக மாறி விட்டன. அத்தோடு சம்பிரதாயங்களும் மற்றும் நிறுவனங்களும் வெறுமனே தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தவும் அவற்றுக்கு இணங்கிப்போகவுமே எதிர்பார்க்கப்படுகின்றன (கார்ல் ட்ரூமேன், The Rise and Triumph of the Modern Self).
இந்த நகர்வே பாலினம் மற்றும் பாலினப்பண்பு குறித்த எமது மிகப்பெரும் எழுச்சிமிக்க சிந்தனைக்கு இயற்கையாகவே வழிவகுத்த அடையாளம் தொடர்பான கவலைக்கு வேராக உள்ளது. முந்தையதை பொறுத்தவரை, ஆண், பெண் என்று பாலினத்தை பற்றி பேசுவதிலிருந்து எண்ணிலடங்கா பாலினங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தான சிந்தனைக்கு நாம் நகர்ந்துள்ளோம். ஆனால் பிந்தையதைப்பொருத்தளவில் அவனுக்கு அல்லது அவளுக்கு எவ்விதமான பாலியல் நடத்தையானது சரியானதும் நன்மை பயக்குமானதாகவும் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை தனிநபர்களிடத்தில் விட்டுவிடுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வியத்தகு முன்னேற்றங்களுடன், மனிதனாக இருப்பதற்கு எது வழிவகுக்கின்றது என்பதை புரிந்துகொள்வதில் சமூகமானது வேறு சவால்களை எதிர்கொள்கிறது. மீவுமனிதத்துவ தொழில்நுட்பமானது (மனிதனது வயைறுக்கப்பட்ட உடல், உள ஆற்றலை வரையறையற்றதாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம்) முன்பு நமது வரையறுக்கப்பட்ட உடல் மற்றும் உள ஆற்றலுக்கு அப்பால் வாழ்வதற்கும் செயற்படுவதற்கும் வழிகளை வழங்கினால் எப்படி இருக்கும்? மீவுமனிதத்துவ தொழில்நுட்பம் குறித்த கோட்பாடுகள் "மன பதிவேற்றுதல்" மற்றும் மின்னணு சில்லிற்கூடாக (Electronic chip) காலவரையின்றி வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் வரை நீடிக்கப்படுகின்றன. பின்னர், எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள சமீப வெளிப்பாடுகளான AI மற்றும் நுண்ணறிவை உருவாக்கும் சாத்தியக்கூறுகளானது நாம் எப்போதும் நம்மை அறிந்த விதத்தில், மனிதனை பிரதிபலித்து மற்றியமைத்தாலும், விரைவில் மனிதக்கட்டுப்பாட்டை விஞ்சக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
பிரசங்கிகள் எந்த வேதாகம அடிப்படையும் இல்லாத தங்கள் கற்பனைகளில் தோன்றிய மகத்தான கூற்றுக்களை சுட்டிக்காண்பிப்பதன் மூலம் திருச்சபை கூட இந்த "வெளிப்படையான தனிமனிதவாதத்துவத்தினை" முழுமையாக்குவதினால் பாதிக்கப்பட்டுள்ளது.
“நீங்கள் பேசும் வார்த்தைக்கூடாக உங்கள் வாழ்வை மீள்கட்டமைத்து நீங்களே உங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என ஒருவர் கூறுகிற அதேவேளை, மற்றொருவர் தனது தனிப்பட்ட ஊழியர்களிடத்தில் கட்டளையிடுவதைப்போல வான தேவதூதர்களுக்கும் கட்டளையிடுகிறேன் என்று கூறுகிறார்!
நாம் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டுள்ளோம் என வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதனை பற்றிய முதல் குறிப்பானது, இந்த தனித்துவமான படைப்பினை வரையறுக்கும் காரணியை நிறுவுகிறது. "கடவுளின் சாயல்" என்பது மனிதர்கள் தங்கள் படைப்பாளரான கடவுளுடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்புகொள்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கிறதுடன், மனிதர்களாகிய நாம் கடவுளின் பரந்த மற்றும் அழகான உலகில் அவரின் பிரதிநிதிகளாக இருப்பதற்கு, எவ்வளவாக பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது. கடவுளின் சாயலைக்கொண்டிருந்த ஆனால் மனிதகுலத்தின் பாவக்கிளர்ச்சியினால் கெட்டுப்போன சிதைந்த, மனித இனத்தை முற்றிலும் அகற்றிப்போடுவதற்கு மாறாக கடவுள் அதை மீட்டெடுப்பதற்கும், மீளப்புதுப்பிப்பதற்கும் ஆயத்தமானார்.
குமாரனாகிய கடவுளின் பிறப்பானது, கடவுள் வடிவமைத்து நியமித்த தெளிவான வழியில் நமது மனிதகுலத்தின் தொடர்ச்சியான "நன்மையினை" உறுதிப்படுத்துகிறது. இயேசு கன்னி மரியாளிடத்தில் பிறந்ததன் மூலமாக முழுமையான மனிதரானார். தமது இளைமைப்பருவத்தில் நம்மைப்போலவே இயற்கைக்கு அமைவான இயல்பான மகிழ்ச்சிகளையும் வரம்புகளையும் அனுபவித்து வாழ்ந்தார். அவரது பாவமற்ற தன்மையே அவருக்கும் எங்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை காண்பிக்கும் காரணியாக இருந்தது.
எனவே, கிறிஸ்துவின் பிராயச்சித்த மரணமும், சரீர உயிர்த்தெழுதலும், உடைந்த மனிதகுலம் மீட்கப்படுவதற்கும், கிறிஸ்துவின் சாயலைப்போல மாறும் வரை ஒவ்வொரு தனிமனிதனிலும் உள்ள கடவுளின் சாயல் மீளப்புதுப்பிக்கப்படுவதற்குமான வழியை திறந்துள்ளது.
கடவுளின் நோக்கம் என்பது எப்போதுமே நம்மை மாற்றுவதே, ஆனால் அது மனிதர்களாக இருப்பதிலிருந்து மனித வரம்புகளை கடந்த மனிதனுக்கு பிந்தைய நிலைக்கு மாறுவதற்கோ, பாவமுள்ள மனிதர்களாக இருப்பதிலிருந்து ஓரளவு தெய்வீக நிலைக்கு மாறுவதற்கோ அல்ல. மாறாக ஆரம்பத்தில் இருந்தே அவரது திட்டம் என்பது, தமது மன்னிப்பின் கிருபையினாலும், மீட்பதற்கான வல்லமையினாலும் மனிதனை பாவநிலையிலிருந்து மகிமையும், முழுமையான மனிதனுமாக மாற்றுவதற்கான வழியை உருவாக்குவதேயாகும்.
ஐவோ பூபாலன்
சித்திரை, 2024