விசுவாச அறிக்கை
வேதாகமத்தின் பழைய, புதிய ஏற்பாடுகளில் அடங்கியுள்ள 66 நூல்களும் தெய்வீகமானதும் ஆரம்பத்தில் தவறற்ற நிலையில் பூரணமாக அருளட்டப்பட்டது எனவும் விசுவாசிக்கிறோம். அவை எமது நம்பிக்கையையும், நடத்தையையும் ஆளுகை செய்யும் அதிஉயர்வான, தனித்துவமான அதிகாரமுள்ளதும், நம்பிக்கைக்குரியதும், என விசுவாசித்து கீழ்ப்படிகிறோம். தேவன், சபையானது வேதாகமத்தை புரிந்து கொள்வதற்கு பாரம்பரியம், நியாயம், அனுபவம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம்.
தூயரும், நித்தியரும், இறையாண்மை உடையவரும், சர்வ வல்லரும், காணப்படும், காணப்படாத யாவற்றையும் சிருஷ்டித்தவரும், நித்திய அன்பின் சமஉறவில் இணைக்கப்பட்டுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறோம்.
பிதாவாகிய தேவன் அவரது பராமரிப்பு, நீதியுள்ள அதிகாரம் என்பவற்றை அற்புதமான தனது சிருஷ்டிப்பினால் எமக்கு வெளிப்படுத்தி, தாம் எமது பிதா என்பதை எமக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறோம். முன்பதாகவே ஆபிரகாமை தெரிந்து கொண்டதனிமித்தம் தமது அழைத்ததன் நிமித்தம் தமது அன்பினால் இஸ்ரவேல் மக்களை தெரிந்து கொண்டு உடன்படிக்கை செய்தார். இப்பொழுது அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் சகல மக்களையும் அவருடைய அன்பின் உறவுக்குள் கிருபையினால் அழைக்கிறார். அதன் மூலம் நாம் தேவனது நித்திய பிள்ளைகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ளோம் என்பதை விசுவாசிக்கிறோம்.
ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம்: அவர் கன்னி மரியாளிடத்தில் பரிசுத்த ஆவியினாலே உற்பவித்து பிறந்தார், தேவன் மனிதனானார்.
தேவனுக்கு கீழ்ப்படிந்து பாவம் அற்று காணப்பட்டு தேவனுடைய இராஜ்யத்தை பிரசித்தம் பண்ணினார். அவரது ஊழியத்தினாலும், அற்புதங்களினாலும், அவரது சர்வ வல்லமையை வெளிப்படுத்தி அவருடைய சீஷர்களுக்கு வாழ்வதற்கான மாதிரியை ஏற்படுத்தினார்.
அவரது பிராயச்சித்த பரிகார பலியால் வேதனையையும், நிந்தையையும் அனுபவித்து மனிதனுக்கான பாவத்தின் கிரயத்தை செலுத்தி பாவத்தின் மீதும், சாத்தானின் வல்லமையின் மீதும் வெற்றி சிறந்தார்.
அவரது சரீர உயிர்த்தெழுதலின் மற்றும் மகிமைப்படுத்தப்படுதலின் மூலம் முழு உலகையும், வரலாற்றையும் ஆளுகை செய்து சபைக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார்.
எதிர்பார்க்கப்படும் அவரது வருகையின் நியாயத்தீர்ப்பினால் தேவனது நீதியை நிலைநாட்டி அவரது இராஜ்யத்தை நிலை நிறுத்துவார்.
பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறோம்: ஜீவனை கொடுக்கிறவரும், சிருஷ்டிப்பில் கிரியை செய்கிறவரும், தேவனுடைய பிரசன்னத்தை உணர்த்துபவரும், சத்தியத்தை வெளிப்படுத்துபவரும், அவரது குமாரனுக்கு சாட்சியாக இருப்பவருமான பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறோம்.
அவர் மனிதனின் பாவத்தை குறித்து உணர்த்தி நற்செய்திக்கு செவிமடுக்க உதவுகிறார்.
அவரை விசுவாசிப்பவர்களிடத்தில் வாசமாயிருந்து அவர்களுக்கு வல்லமையளித்து, பரிசுத்தப்படுத்தி, வழிகாட்டி, ஒரே சபையாக ஒன்றுபடுத்துகிறார்.
ஆவியின் வரங்களை அருளி விசுவாசிகள் பரந்தளவில் பணியாற்ற ஊக்குவிக்கிறார்.
மனிதன் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதை விசுவாசிக்கிறோம். அதனிமித்தம் அவருடன் உறவுள்ளவனாக படைப்பில் அவரது ஆளுகையின் பிரதிநிதியாக காணப்படுகிறான். தேவனுக்கு கீழ்ப்படியாததன் மூலம் அவரது சாயல் சிதைந்து அவனது மானிட வாழ்வின் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தேவனையும், சமூகத்தையும், சிருஷ்டிப்பையும் விட்டு பிரிந்திருக்கிறான். ஆயினும் தேவன் அவனுக்களித்த சுயமதிப்பும், பெறுமதியும் அவனிடத்தில் காணப்படுகிறது என்பதை விசுவாசிக்கிறோம்.
பாவத்தில் வீழ்ந்துள்ள மனிதகுலம் இயேசு கிறிஸ்துவின் பாவபரிகார பலியினால் மட்டுமே மீட்கப்பட முடியும் என்பதை விசுவாசிக்கிறோம். இரட்சிப்பானது பரிசுத்தாவியினால் உண்டாகும் மறுபிறப்பினூடாக நித்திய ஜீவனை அடைவதாகும். இது பாவம் மன்னிக்கப்பட்டு, குற்ற உணர்வு, வெட்க மனப்பான்மை நீங்கி தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட்ட நித்திய வாழ்வை பரிசுத்த ஆவியின் மறுஜென்மம் மூலம் மீளப்பெறுவதாகும். தேவனுடனான ஒப்புரவு விசுவாசிகள் அனைவருடனுமான ஒப்புரவை வலியுறுத்துகிறது. மீட்பில் மனிதன் சாத்தானின் வல்லமையிலிருந்தும் மரணத்தின் பயத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறான். மீட்பானது இயேசு கிறிஸ்து மீது மட்டுமே வைக்கும் விசுவாசம், மனந்திரும்புதலால், கிருபையினால் கிடைத்து நற்கிரியைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவின் இக்கிரியையானது வீழ்ந்துபோன சிருஷ்டிப்பின் மறுசீராக்கும் பணியை செயற்பாட்டை உள்ளடக்கியுள்ளது.
அனைத்து விசுவாசிகளும் பரிசுத்த வாழ்க்கை வாழுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என விசுவாசிக்கிறோம். இவ்வாழ்வானது கிறிஸ்துவைப்போல் மறுரூபமாதலுக்குள் எம்மை மென்மேலும் வழிநடத்துகிறது. பரிசுத்தமானது பரிசுத்தாவியினாலும், கிருபையினாலும், தேவ வார்த்தையின் ஊழியத்தினாலும் உண்டாகிறது. கிறிஸ்தவ சமூகமாக கீழ்ப்படிதலை வாஞ்சித்து நடப்பதன் மூலம் இது உண்டாகும்.
அப்போஸ்தல உபதேசத்தின் அடிப்படையிலும், பரிசுத்தாவியானவரின் உருவாக்கத்திலும், கிறிஸ்து ஸ்தாபித்த சபையை விசுவாசிக்கிறோம். சபையானது அனைத்து உலக மக்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகளை உள்ளடக்கி ஒப்புரவில் வளர்ந்து பெருகிவரும் ஐக்கியப்பட்ட கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது.
திருத்தூதுப்பணியானது கடவுளின் தொடர்ச்சியான மீட்பின் கிரியையாகவும் சிருஷ்டிப்பை மறுவுருவாக்கும் செயற்பாட்டினூடாக கிறிஸ்துவின் இராஜரீகத்தை நிலைநாட்டும் கிரியையாகவும் காணப்படுகிறது என்பதை விசுவாசிக்கிறோம். இப்பணிக்காக அவர் சபையை பரிசுத்த ஆவியினூடாக பலப்படுத்தி இராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்க உலகிற்குள் அனுப்புகிறார். அதனிமித்தம் இரக்கமும் நீதியும் உண்டாகி சபையானது உலகில் கிறிஸ்துவின் சுகந்த வாசனையாக காணப்படும்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய இராஜ்யம் முழுமை பெறுகிறது என்பதை விசுவாசிக்கிறோம். அவரது நீதியான நியாயத்தீர்ப்பின் மூலம் தீமை ஒழிக்கப்படும், மனந்திரும்பாதவர்கள் நித்திய ஆக்கினை தீர்ப்படைவார்கள், மனந்திரும்பியவர்கள் நித்திய வாழ்வடைவார்கள். அவரது இந்த புதிய சிருஷ்டிப்பில் மீட்கப்பட்ட மக்கள் தேவனுடன் மகிமையின் ஐக்கியத்தில் நித்தமும் வாழ்வார்கள்.